நடிகர் விஜய் தலைமையிலான தவெக தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை அக்கட்சி பெறவில்லை. இதனை தொடர்ந்து மற்ற கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.
அதன் படி, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து விசிக மற்றும் இடதுசாரிகளிடமும் தவெக ஆதரவு கோரியுள்ளது.
மறுபுறம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 47 இடங்களை கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து தவெகவிற்கு அதிமுக ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த தகவல் அதிமுக தரப்பில் மறுக்கப்பட்டது. இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார். அதிமுக எம்எல்ஏக்கள் உள்ள ரிசார்ட்டிற்கு சென்ற அவரை அங்கிருந்தவர்கள் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து அங்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி,“நல்லதே நடக்கும் நான் கூறும் வரை யாரும் புதுச்சேரியை விட்டு புறப்பட வேண்டாம்” என கட்டளையிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி சேலம் புறப்பட்டார்
முன்னதாக இன்று எடப்பாடி பழனிசாமி தமிழ் நாடு பொறுப்பு ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது குறிப்படத்தக்கது.







