தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 47 இடங்களை கைப்பற்றியுள்ளது. மறுபுறம் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை அக்கட்சி பெறவில்லை. இதனால் மற்ற கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது.
இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவு அளித்தது. இதனால் சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து தவெகவிற்கு அதிமுக ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அந்த தகவல் அதிமுக தரப்பில் மறுக்கப்பட்டது. ஆனால் சி.வி. சண்முகம் தலைமையிலான ஒரு பிரிவினர் தவெக நிலைப்பாட்டில் இருப்பாதாக கூறப்பட்டுகிறது.
இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை அவர் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வழங்கினார்.
அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சி.வி. சண்முகம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அசாதாரண அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவே சி.வி. சண்முகத்தில் ராஜினாமா நிகழ்ந்துள்ளது.







