நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் புத்துணர்ச்சி பெறும் – சோனியா காந்தி நம்பிக்கை

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெறும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.   காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும்,…

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெறும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் 150 நாள் பாதயாத்திரையாக இதை தொடங்கியுள்ளார்.

 

இந்த யாத்திரையில் ராகுல் காந்தி உட்பட 118 தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் ஒரு நாளைக்கு 20-25 கிலோ மீட்டர் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். மொத்தம் 3,570 கிலோ மீட்டர் தொலைவு மேற்கொள்ளவுள்ள நடைபயணத்தின் தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரியில் இன்று நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒற்றுமையை வலியுறுத்தி தேசியக் கொடியை கொடுத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், ராகுல்காந்தியின் நடைபயணத்திற்கு அவரது தாயாரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தான் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருவதால் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

யாத்திரையில் கலந்து கொள்ளமுடியாதது தனக்கு வருத்தம் தான் என தெரிவித்துள்ள அவர், ராகுல்காந்தியின் இந்த பயணத்திற்கு பிறகு காங்கிரஸ் மிகப்பெரிய புத்துணர்ச்சி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் நடைபயணத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் நன்றி என்றும் ஒற்றுமையாக நாம் முன்னேறி செல்வோம் என்றும் கூறியுள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.