ஓணம் திருநாள் – தலைவர்கள் வாழ்த்து

ஓணம் திருநாளை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் முதல் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வாழ்கின்ற கேரள மக்களும், கேரளத்தில் வாழுகின்ற…

ஓணம் திருநாளை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் முதல் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வாழ்கின்ற கேரள மக்களும், கேரளத்தில் வாழுகின்ற தமிழ் மக்களும், சகோதர வாஞ்சையோடு மகிழ்ந்து கொண்டாடும், மகத்தான திருவிழா ஓணம் பண்டிகை. தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று இறைவனே நேரில் வந்து பார்ப்பதாகவும், அப்போது அனைவரும் வீடு தேடிவரும் இறைவனை மலர்க்கோலமிட்டும், அலங்காரம் செய்தும், அறுசுவை உணவு படைத்தும், வரவேற்பதே ஓணம் பண்டிகையின் கருத்தாக்கம்

அக்காலத்தில் மன்னர்களை இறைவனுக்கு நிகராக வணங்குதல் மரபு. ஓணம் திருநாளில் மகாபலி சக்கரவர்த்தி இந்த பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். நாம் நலமாக இல்லை என்றால் கூட மாமன்னரின் வருகை மக்களுக்கு நன்மைகளை வழங்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வருவதால் ஓணம் சிறப்புக்குரியது. அத்தப்பூ கோலமிட்டு, அழகான தோரணங்கள் கட்டி, நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்க நாம் தயாராவது போல மகாபலியை வரவேற்கும் விதமாக வண்ண மலர்களால் அழகுபடுத்துகிறார்கள். ஓணம் திருவிழா, நம் கேரள சகோதர்களின் அறுவடைத் திருவிழாவாகவும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், கொண்டாடும் திருவிழாவாகவும் திகழ்கின்றது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அனைவருக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரம்பரியமும், பண்பாடும் மிகுந்ததும்; அன்பின் உறைவிடமாகவும், ஈகைப் பண்பின் அடையாளமாகவும் திகழ்வதுமான ஓணம் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று வெகுவிமரிசையாக கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது “ஓணம்” திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட ‘வாமன அவதாரம்’ தரித்த திருமால், தனக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று மகாபலி சக்கரவர்த்தியிடம் கேட்டு, ஓர் அடியை வானத்திலும், இரண்டாம் அடியை பூமியிலும், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையிலும் வைத்து அடக்கியதோடு, அந்த மன்னனின் வேண்டுதலின்படி, ஒவ்வோர் ஆண்டும் அந்த நாளில் அவர், தம் நாட்டு மக்களை வந்து காணும்படியாக அருள்புரிந்தார்.

அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ‘பிறர் வாழ நாம் வாழ்வது’, ‘ஆணவத்தை அடக்குவது’, ‘தர்மம் காப்பது’, ‘பக்தியே முக்தி என்பதை உணர்த்துவது’ ஆகியவைதான் ஓணம் திருநாள் நமக்கு உணர்த்தும் அறிவுரைகளாகும். திருவோணப் பண்டிகையின்போது, பத்து நாட்களுக்கு மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் கோலமிட்டு, வண்ணப் பூக்களால் அலங்கரித்து, அதன் நடுவே குத்து விளக்கேற்றி ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வதோடு, உள்ளம் கவரும் நடனங்களை அரங்கேற்றியும் இன்புறுவார்கள்.

திருவோணத்திருநாளான இந்நன்னாளில், ஆணவம் அகன்று; பசி, பிணி, பகை நீங்கி; அன்பு, அமைதி, சகோதரத்துவம் பெருகி; மக்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்திட வேண்டும் என்ற என் விருப்பத்தினைத் தெரிவித்து, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த “ஓணம்” திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.