புளியங்குடி நகராட்சியில் சேர்மன் – கமிஷனர் இடையே நடந்த பனிப்போர் காரணமாக நகராட்சி கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் உள்ள புளியங்குடி நகராட்சி பகுதியானது 33 வார்டுகளை கொண்ட நகராட்சி பகுதியாகும். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இந்த நகராட்சி பகுதியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மிகப்பெரிய இந்த புளியங்குடி நகராட்சியின் சேர்மனாக விஜயா சௌந்தரபாண்டியன் என்பவர் உள்ளார்.
இந்தநிலையில், மாதம் தோறும் நகர்மன்ற கூட்டங்கள் நடக்கும் போது, சேர்மனின் அண்ணனான முன்னாள் நகராட்சி கமிஷனர் பவுன்ராஜும் (சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்), சேர்மனின் கணவருமானசெளந்தரபாண்டியன் (போலீஸ்காரர்) என்பவரும் கூட்டத்தின் போது உள்ளே வந்து நகர்மன்ற கூட்டத்தில் தலையிடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்த சூழலில், நகர்மன்ற கூட்டத்திற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் அல்லாத வெளிநபர்கள் வருவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து நகராட்சி கமிஷனர் தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே, வெளி நபர்கள் நகராட்சி கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை உயரதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இதனால், கோபம் அடைந்த சேர்மனின் உறவினர்கள் தொடர்ந்து நகராட்சி கமிஷனருக்கு கொலை மிரட்டல் விடுத்து, தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், நகராட்சி கமிஷனரான குமார்சிங் என்பவர் புளியங்குடி காவல் நிலையத்தில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள், கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று புகார் ஒன்று அளித்துள்ளார். புகாரின் பேரில், தற்போது போலீசார் சி.எஸ்.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில், நகராட்சி கமிஷனருக்கு எதிராக மற்றொரு புகாரை நகராட்சி சேர்மன் தரப்பில் அளித்துள்ளனர்
இந்த நிலையில் இரு தரப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் நகராட்சி கமிஷனரை எப்படியாவது பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என நகராட்சி சேர்மன் தரப்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் புளியங்குடி நகராட்சி கமிஷனர் குமார்சிங்கை காயல்பட்டினம் நகராட்சிக்கும், காயல்பட்டின நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சுகந்தியை புளியங்குடி நகராட்சி கமிஷனராகவும் மாற்றி நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிகார மோதல் காரணமாக நகராட்சி கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







