முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு இந்தியா

“வெறுப்பு அரசியலுக்கு தந்தையை இழந்தேன், தாய்நாட்டை இழக்க மாட்டேன்” – ராகுல் காந்தி

“வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன், எனது நாட்டை இழக்க மாட்டேன்” என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை
வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும்
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே
ஒன்றிணைவோம்) என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரையைத் தொடங்கும் ராகுல் காந்தி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கன்னியாகுமரியில் இன்று தொடங்க இருக்கும் பாத யாத்திரையில் கலந்துகொள்வதற்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து நேற்று மாலை விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ராகுல் காந்தி இரவு சென்னையில் தங்கினார்.

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் 7 நதிகள் :-

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை
6.30 மணியளவில் சென்னையில் இருந்து சாலை வழியாக புறப்பட்டு, காஞ்சிபுரம்
மாவட்டம் திருப்பெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பாரத
பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு காலை 7.17 மணிக்கு வந்தார்.
ராஜீவ்காந்தி நினைவிடம், செவ்வந்திபூ, மல்லிகைப்பூ, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.


ராஜீவ்காந்தி நினைவிடத்தில், ராகுல் காந்தி 10 விநாடி கைகூப்பி வணக்கம்
செலுத்தினார். தொடர்ந்து, மல்லிகை மலர்களால் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, ஒருமுறை நினைவிடத்தைச் சுற்றி பார்த்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, நினைவிடத்தில் அரச மரக்கன்றை ராகுல் காந்தி நட்டார்.
காலை 7.25 மணியளவில் வீணை காயத்ரியின் இசையஞ்சலியில் காங்கிரஸ் கட்சியினருடன் ராகுல் காந்தி பங்கேற்றார். அவருடன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கு.செல்வபெருந்தகை, பொருளாளர் ரூபி.மணோகரன் எம்.எல்.ஏ, முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், துணைத் தலைவர்கள் ஆர்.தாமோதரன், உ.பலராமன், சொர்ணமா சேதுராமன், முருகானந்தம், ராஜீவ்காந்தி படுகொலையின்போது பாதுகாப்பு பணியில் இருந்த முன்னாள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசியா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.

காவேரி, நர்மதா, கங்கை, கோதாவரி, யமுனா, புனித மெக்காவில் இருந்து ஜம்ஜம்
நீர், இயேசு ஞானஸ்தானம் செய்த ஜோர்தான் நதியில் எடுத்த புனித நீர் ஆகியவை
கலசத்தில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

ராஜீவ் காந்திக்கு பிடித்த மாம்பழம் :-

ராஜீவ்காந்தி விரும்பி சாப்பிடக்கூடிய பழமும், அவர் இறுதியாக சாப்பிட்ட
மாம்பழம் அவர் நினைவாக,  ஆந்திர மாநிலத்தில் இருந்து விமானம் மூலமாக பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்டு, ராஜீவ் நினைவிடத்தில் வாழை இலையில் மூன்று மாம்பழம் வைக்கப்பட்டுள்ளது.

நினைவிடத்தில் உருகிய ராகுல் காந்தி :-

இசையஞ்சலியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு
நேராக அமர்ந்து, நினைவிடத்தை நோக்கி அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தார்.
நிகழ்ச்சியில், இசைக்கப்பட்ட இசையுடன், தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவுகளை மனத்தில் உருக்கமாக அசைபோட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று, மீண்டும் ஒருமுறை அமைதியாக எழுந்த ராகுல் காந்தி தனது தந்தையின்
நினைவிடத்தில் 20 விநாடி நின்று கைகூப்பி அஞ்சலி செலுத்திவிட்டு, ஒருமுறை
சுற்றி பார்த்து கைகூப்பி வணக்கம் செலுத்தினார். ராஜீவ்காந்தி படுகொலை
செய்யப்பட்டபோது, அவரின் மனநிலையை சித்தரிக்கும் வகையில், ராஜீவ் உருவப்படம் வரையப்பட்டு இருந்தது. அதனை உற்று பார்த்த ராகுல் காந்தி மனம் உருகி நின்றார். இதனைப் பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர்.

நினைவிடத்தில், ராஜீவ்காந்தி கடந்துவந்த பாதை செவ்வந்தி பூக்களால்
அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து, ராஜீவ்காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் அவருடன் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நினைவிட நுழைவு வாயிலில், திருப்பெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கொடியை ராகுல் காந்தி ஏற்றினார். முன்னதாக, ராஜீவ் நினைவிடத்தில் உள்ள பாதுகாப்பு அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் திருவுருவ ப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்,
இசையஞ்சலியை நடத்திய வீணை காயத்ரியை ராகுல் காந்தி சந்தித்து கைகூப்பி வணக்கம் செலுத்தி பாராட்டினார்.

நினைவிடத்தில் இருந்து 7.45 மணிக்கு ராகுல் காந்தி புறப்பட்டார். சுமார் 20 நிமிடங்கள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி இருந்தார். பின்னர், ராகுல் காந்தி மீண்டும் சென்னை திரும்பினார். இந்நிலையில், எனது தந்தையை இழந்தேன். அதற்காக என் நாட்டை இழக்க மாட்டேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என் தந்தையை பிரிவினைவாத வெறுப்பு அரசியலுக்கு இழந்துவிட்டேன். என் நாட்டையும் அப்படி இழக்கமாட்டேன். அன்பு வெறுப்பை வீழ்த்தும். நம்பிக்கை அச்சத்தை தோற்கடிக்கும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெல்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருச்சி நகை கொள்ளையில் திருப்பம் : 4மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை கைது செய்த போலீஸ்

Web Editor

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு -இந்திய மல்யுத்த கூட்டமைப்பு

Yuthi

கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!