கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி விரைந்து முடிவெடுக்க வேண்டுமென ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
பீகாரில் 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 122 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. இருப்பினும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்தது. முதல்வராக இருந்த நிதிஷ்குமார் கடந்த ஆண்டு பாஜக கூட்டணியிலிருந்து விலகி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலரமைச்சரானார்.
பிரதான எதிர்க்கட்சியான லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் 19 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி உள்பட பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். பாஜக கூட்டணியிலிருந்து விலகிய பிறகு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து அவர் தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில், எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து முன்னேறி செல்ல வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது என்று பேசியிருந்தார்.
அண்மைச் செய்தி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
இந்நிலையில் பாட்னாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 11-வது மாநில மாநாட்டில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் நிதிஷ் குமார் பேசுகையில், கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி சீக்கிரம் முடிவெடுக்க வேண்டும். என்னுடைய பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து ஒன்றாக போட்டியிட்டால் பாஜக 100 தொகுதிகளுக்கு கீழே சென்று விடும். இந்த விவகாரத்தில் என் பரிந்துரைகளை ஏற்கவில்லையென்றால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும் என்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களைப் பார்த்து கேள்வி எழுப்பிய நிதிஷ்குமார், இது குறித்து காங்கிரஸ் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.







