“போராளிகள் போர்வையில், தேசத்தின் பொது அமைதியை குலைக்க முயலும் காங்கிரஸ்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

காங்கிரஸின் வெறுப்பரசியலை ஊக்குவிப்பது பேராபத்தானது என்பதை உணர்த்தும் குறியீடு தான், தமிழக பாஜகவின் இன்றைய முற்றுகைப் போராட்டம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வினாத்தாள் முறைகேட்டிற்கு எதிராகப் போராடுகிறோம்” என்ற போர்வையில், தேச ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, தேசத்தின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்து, பாஜக சார்பாக இன்று தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்களின் நலன் என்று வந்து விட்டால், அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் ஓரம்கட்டி வைத்து விட்டு, களத்தில் இறங்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துடிக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. நாட்டின் தூண்களாகிய இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து அரசியல் செய்யுமளவிற்கு நாங்கள் தரம் தாழ்ந்து போகவில்லை. ஆனால், அரசியலில் “Field Out” ஆன காங்கிரஸ் போன்ற கட்சிகள், மாணவர்கள் போராட்டத்தை கலவரமாக மாற்ற நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவுவதை ஆதரிக்கும் காங்கிரஸின் வெறுப்பரசியலை ஊக்குவிப்பது பேராபத்தானது என்பதை உணர்த்தும் குறியீடு தான், தமிழக பாஜகவின் இன்றைய முற்றுகைப் போராட்டம்.

இப்போராட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, காங்கிரஸாரை கதிகலங்க வைத்த தமிழக பாஜகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றிகள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.