திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு டிரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு உரத்தெளிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் சார்பில், அம்மாவட்டத்தில் இருந்து வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு ட்ரோன் இயந்திரம் மூலம் விவசாய பயிர்களுக்கு உரத்தெளிப்பு குறித்த விளக்க கருத்தரங்கம் திருவாரூர் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.மண்டல இணைப்பதிவாளர் சித்ரா தலைமையில் இந்த கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெற்றது.
கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் பெரியசாமி முன்னிலை வகித்த இக்கருத்தரங்கத்தில், கூட்டுறவு சரக துணை பதிவாளர்கள் கார்த்திகேயன், ராமசுப்பு, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கட்டுப்பாட்டில் இருந்து வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்கள், கள மேலாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\
இக்கருத்தரங்கத்தில் கும்பகோணம் கதிர் அக்ரி கிளினிக் நிறுவனத்தைச் சேர்ந்த கோபிநாத் கலந்து கொண்டு, ட்ரோன் இயந்திரம் மூலம் விவசாயப் பயிர்களுக்கு ஊர தெளிப்பு குறித்த விளக்க கருத்துரையினை அளித்தார்.
மேலும் இந்த கருத்தரங்கத்தில், வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் வழியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் அறுவடை இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம், சரக்கு வாகனங்கள் வாங்குதல் மற்றும் டி.டி.பி சென்டர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து சங்க செயலர்களுக்கு கருத்துரைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளைத் திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் குமாரசாமி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
-சௌம்யா.மோ







