ஏழைகள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதியில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க புதிய நடைமுறைகளை கொண்டு வரலாம் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை வழங்கியுள்ளது.
மத்திய அரசின் ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.2.40 லட்சம் வழங்கும் திட்டத்தில் இறந்தவர் பெயரில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட கோரி லால்குடியை சேர்ந்த உதயகுமார் தொடர்ந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அமர்வு விசாரித்தது.
அப்போது, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முதன்மைச் செயலரிடம் தகவல் பெற கால அவகாசம் தேவைப்படுவதாக அரசு தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதனையடுத்து, ஏழைகள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதிகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஏழைகள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதியில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க முதன்மைச் செயலர் புதிய நடைமுறைகளை கொண்டு வரலாம் என்றும் முறைகேடுகளை தடுக்க பொதுமக்கள் அறியும் வண்ணம் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், லஞ்ச ஒழிப்பு துறை கடிதத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.