பழனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, ஆசிரியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு ஊதியம் தராமல் அவர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரில்லியன்ட் கிட்ஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் மற்றொரு கிளை, பழனி அருகே கணக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இரண்டு பள்ளிகளிலும் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் தராமல் பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கு மிகக் குறைவான சம்பளமே வழங்கப்படுவதாகவும், அவர்களுடைய ஊதியத்தில் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்பட்டாலும், அது முறையாக செலுத்தப்படுவதில்லை என்றும், பள்ளி வாகனங்களுக்கான அனுமதி புதுப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை..! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
அதே நேரத்தில், தங்கள் மீதான புகார்களை பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதையடுத்து பள்ளி கட்டடங்களுக்கு முறையான அனுமதி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.








