33 சதவிகித விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து விட்டதால், ஓரிரு நாட்களில் சென்னையில் நிலைமை சீராகிவிடும் என்று கூறினார்.
மழையால் பாதிக்கப்பட்ட 2,699 பேர், 44 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பயிர் பாதிப்பு குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும், 33 சதவிகித விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூறினார்.
மழை நின்ற பின் மத்திய குழு ஆய்வு செய்யக் கோரிக்கை வைக்க உள்ளோம் என்ற அமைச்சர், இந்த மழையை வெகு சாமர்த்தியமாக முதலமைச்சர் சமாளித்துள்ளார், 2015ஆம் ஆண்டு 124 பேர் உயிரிழந்தனர். இம்முறை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 834 கால்நடைகள் இறந்துள்ளது. மழையால் 2284 குடிசைகள் சேதமடைந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.







