“10 ஆண்டுகளில் 4 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது” – குடியரசு தலைவர் உரை!

மத்திய அரசால் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் 2 அமர்வாக நடைபெறுகிறது. முதல் அமர்வு இன்று தொடங்கி முதல் வருகிற 13ம் தேதி வரையும், 2-ம் அமர்வு மார்ச் மாதம் 9ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2ம் தேதி வரையும் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை 9-வது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அப்போது குடியரசு தலைவர் தனது உரையை தொடங்கிய உடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர். இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த பத்து ஆண்டுகளில் 4 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்ற மகத்தான மருத்துவ திட்டம் நாடு முழுவதும் விரிவு படுத்தப்பட்டு ஏழை எளிய மக்கள் பலம் பெற்று வருகின்றனர்.

பல்வேறு துறைகளில் நாடு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பாம்பன் பாலம் செயல்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 12.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி உள்ளது. மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 4 கோடி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். உலகின் இரண்டாவது பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா உயர்ந்துள்ளது. கைப்பேசி உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. விண்வெளி சுற்றுலா செயல்படுத்த இந்தியாவுக்கு வெகு தூரம் இல்லை. உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை இருந்தபோதும் இந்தியாவில் பொருளாதாரம் வலுவுடன் இருக்கிறது.

சூரிய மின் திட்டத்திற்கான அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளோம். அணுமின் உற்பத்தியை அதிகரிக்க புதிய கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட அரசு உறுதிபூண்டுள்ளது. நாட்டின் கிட்டத்தட்ட 95 கோடி குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பு சலுகைகள் இப்போது கிடைக்கின்றன. செமி கண்டக்டர் சிப்புகள் உற்பத்தியில் உலகத்திற்கே முன்மாதிரியாக இந்தியா திகழ்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் AIIMS உள்ளிட்ட மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது ஒரு சரித்திர நிகழ்வு. இதன் மூலமாக சேமிப்பு என்பது நடுத்தர குடும்பத்தில் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்பு என்பது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அருணாச்சல் பிரதேசம், திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் தலைநகரங்கள் அகல ரயில் பாதைகள் மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறது. உஜ்வாலா திட்டத்தின் மூலம் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எல்.பி.ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

எனது அரசாங்கம் வெளிப்படையான மற்றும் நேர்மையான அமைப்புகளை நிறுவனமயமாக்கி வருகிறது. ஒரே ஆண்டில், நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் ரூ.1.75 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பலன்கள் நேரடியாகப் பயனாளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் நலனுக்கு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆப்பரேஷன் சிந்துர் நடவடிக்கை இந்திய படைகளின் வீரத்தை வெளிச்சம்போட்டு காட்டியது. சிந்தூர் ஆப்பரேசன் மூலம் தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், ஏறக்குறைய 1 கோடி மூத்த குடிமக்களுக்கு மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 8 லட்சம் முதியவர்கள் இலவச மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். 1,80,000 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மையங்கள் நிறுவப்பட்டதன் மூலம், மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே சுகாதார வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது அரசு முக்கிய நோய்களுக்கு எதிராக ஒரு தீர்க்கமான போரை நடத்தியுள்ளது. செல் இரத்த சோகை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், 6 கோடிக்கும் மேற்பட்ட குடிமக்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இது பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த நோயைக் கட்டுப்படுத்த உதவியுள்ளது.

திட்ட அடிப்படையிலான பிரச்சாரங்கள், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தின் பின்தங்கிய மற்றும் கிராமப்புறங்களில், மூளை அழற்சி போன்ற நோய்களைத் திறம்படக் கட்டுப்படுத்த வழிவகுத்துள்ளன. கோடிக்கணக்கான ஏழை குடிமக்கள் காப்பீட்டுப் பாதுகாப்பு பெற்றுள்ளனர். மேலும் 24,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் நெருக்கடியான காலங்களில் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு வலிமையான கேடயமாக மாறியுள்ளன.

இடதுசாரி பயங்கரவாதத்துக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடதுசாரி தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது. விரைவில் இடதுசாரி தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். கடந்த ஆண்டு 50 ஆயிரமாக இருந்த ஸ்டார்ட்-அப்கள் இந்தாண்டு 2 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 20 லட்சம் பேர் வேலை பெற்றுள்ளனர் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.