மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. புனே மாவட்டம் பாராமதி பகுதியில் அஜித் பவார் சென்ற விமானம் காலை 8.45 மணிக்கு தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. விமானம் விபத்திற்குள்ளான நிலையில், அஜித் பவார் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், விமான விபத்தில் மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அஜித் பவார் உட்பட 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மராட்டிய மாநிலம் பாராமதியில் நடந்த விமான விபத்து வேதனையளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும், தைரியத்தையும் வழங்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். அஜித் பவார் மக்கள் தலைவராக இருந்தார்.
கட்சியின் அடிமட்டம் வரை வலுவான தொடர்பை கொண்டிருந்தார். கடின உழைப்பாளியாகவும், மராட்டிய மக்களுக்கு சேவை செய்வதில் முன்னணியில் இருந்த ஆளுமையாகவும் அவர் மதிக்கப்பட்டார். நிர்வாக விஷயங்களைப் பற்றிய அவரது புரிதலும், ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் குறிப்பிடத்தக்கது. அவரது அகால மறைவு மிகவும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி”. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.







