தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கோவையில் தொற்றுப் பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தைக் கடந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கு விதிக்கப் பட்டுள்ளதால் தொற்று பாதிப்பு கடந்த மூன்று நாட்களாகக் குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 33 ஆயிரத்து 361 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் தொற்றுப் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆறாயிரம் வரை சென்ற தினசரி தொற்று பாதிப்பு, இப்போது, 2779 ஆகக் குறைந்திருக்கிறது. ஒரே நாளில் சென்னையில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். 4719 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். செங்கல்பட்டில் 1392 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 751 பேருக்கும் திருவள்ளூரில் 1221 பேருக்கும் திருச்சியில் 1617 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் கோவையில் தினமும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 4734 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.







