’அந்த பத்திரிகையாளரோடு என் மகளை கைது செய்தது ஏன்?’- இளம்பெண்ணின் தாய் வேதனை!

நடுவானில் பறந்த விமானத்தை மிரட்டி தரையிறக்கி கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரின் காதலியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் தாய் கேட்டுக்கொண்டுள்ளார். பெலாரஸ் நாட்டின் அதிபராக இருப்பவர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ. கடந்த ஆண்டு இங்கு…

நடுவானில் பறந்த விமானத்தை மிரட்டி தரையிறக்கி கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரின் காதலியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் தாய் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெலாரஸ் நாட்டின் அதிபராக இருப்பவர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ. கடந்த ஆண்டு இங்கு நடந்த தேர்தலில் அவர் முறைகேடுகளால் வென்றதாக பரபரப்பு புகார் எழுந்தது. இதையடுத்து, தன்னை விமர்சிப்பவர்களை அவர் கைது செய்து வருகிறார். இந்நிலையில், அந்த நாட்டைச் சேர்ந்த ரோமன் புரோட்டசீவிச் (Roman Protasevich) என்ற பத்திரிகையாளர், லுகாசெங்கோ குறித்து விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து லிதுவேனியா நாட்டில் அவர் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதற்கிடையே, கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் எதிர்க்கட்சி தலைவருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரோமன், பிறகு லிதுவேனியாவுக்கு விமானத்தில் புறப்பட்டார். விமானத்தில் 171 பயணிகள் இருந்தனர். விமானம் பெலாரஸ் வான் எல்லையை அடைந்தபோது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், உடனடியாக தரையிறக்க வேண்டும் என்றும் விமானிக்கு எச்சரிக்கை வந்தது. பின்னர் பெலாரஸ் நாட்டு போர் விமானம், அதை வழிமறித்து தரையிறக்க வைத்தது.

அதில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டதும் பத்திரிகையாளர் ரோமன் புரோட்டசீவிச் மற்றும் அவர் காதலி சோபியா சபேகா (Sofia Sapega) (வயது 23) கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர். அதிபர் உத்தரவின்பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெலாரஸ் அரசு தெரிவித்தது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஆணையம் பெலராஸுக்கு பொருளாதார தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது. கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் பெலாரஸ் நாட்டின் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என்று தங்கள் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே பத்திரிகையாளரின் காதலியான சோபியாவின் தாய் அன்னா துடிச், தன் மகளை காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டிருக்கிறார். ’இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. என் மகள் தவறாக கைது செய்யப் பட்டிருக்கிறார். அவர் சமூக செயற்பட்டாளர் அல்ல. அவள் கடந்த ஆறு மாதமாகத்தான் ரோமனுடன் டேட்டிங்கில் இருக்கிறார். மற்றப் பெண்களை போலவே அவள் தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அதை யாராலும் தடுக்க முடியாது. அவளை கைது செய்திருப்பதை ஏற்க முடியவில்லை. என் மகளை விடுவிக்க யாரிடமும் உதவி கேட்கத் தயாராக இருக்கிறேன்’ என கவலையுடன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.