திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ்

அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வகித்த கோவை செல்வராஜ் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தவர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ்.…

அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வகித்த கோவை செல்வராஜ் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தவர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ். அதிமுக, இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்தபோது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவரது அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்த கோவை செல்வராஜ், அண்மையில் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் அணியால் நீக்கப்பட்டார். கட்சிப் பணிகளில் அவர் முழுமையாக ஈடுபாடு காட்டாத காரணத்தால், பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விளக்கமளித்தது. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் கோவை செல்வராஜ் தன்னை இணைத்துக் கொள்கிறார். திமுகவில் இணைவதற்காக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் அண்ணா அறிவாலயத்திற்கு அவர் வருகை தந்துள்ளார். கோவை செல்வராஜ், அதிமுகவிற்கு முன், காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.