மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் 4 தங்க பதக்கம் வென்ற விழுப்புரத்தை சார்ந்த மாற்றுதிறனாளி மாணவி குறித்து விரிவாகக் காணலாம்.
விழுப்புரம் அருகே ராகவன்பேட்டையில் வசிக்கும் மளிகைக் கடைக்காரரின் மகள் சுபஸ்ரீ. இவர் விழுப்புரம் சண்முகாபுரத்திலுள்ள எம்ஆர்ஐசிஆர்சி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய இந்த அரசு பள்ளி மாணவி, 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் மற்றும் நீச்சல் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
நவம்பர் மாதம் தமிழ்நாடு அளவில் 19 வயதிற்குட்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கான தடகள போட்டியில் 100 மீட்டர் , 200 மீட்டர, 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 15 வினாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்ற சுபஸ்ரீ, பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வெல்வதே தனது லட்சியம் என்றும், அதுவே தனது பெற்றோரின் கனவாக இருந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி என்றால், அவர்களுக்கு என்ன திறமை இருக்கிறது, அவர்களால் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கும் மனிதர்களுக்கு மத்தியில், சிறந்த தடகள வீராங்கனையாக திகழ்ந்து வரும் தனது மகள், ஓட்டப்பந்தயத்தில் மட்டுமல்லாமல் நீச்சல் போட்டியிலும் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதற்காக, சுபஸ்ரீயின் தந்தை ராஜரத்தினம், கடந்த ஆறு ஆண்டுகளாக, நாள்தோறும் அவரை மைதானத்திற்கு அழைத்து சென்று ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கி வருகிறார்.
மாணவியின் திறனை வெளிக்கொண்டு வர அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியையான சோபியா உறுதுணையாக இருந்து மாணவிக்கு பயிற்சி அளித்து வருகிறார். மேலும் தமிழ்நாட்டளவில், மாவட்டங்கள் தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை சுபஸ்ரீ குவித்து வருவதால், தமிழக அரசு நிதியுதவி செய்தால் பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தங்கத்தை பெற முடியும் என ஆசிரியை சோபியா நம்பிக்கை தெரிவிக்கிறார்.
சாதிக்க ஊணம் என்பது தடையில்லை, முயன்றால் எதுவும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துகாட்டாகவும், அனைவருக்கும் முன்னுதாரனமாகவும் திகழும் அரசு பள்ளி மாணவியின் கனவை நனவாக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- காமராஜ், மாவட்ட செய்தியாளர், விழுப்புரம்.







