கோவை பாஜக அலுவலக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக தமிழக பாஜக அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சித்தாபுத்தூர் விகேகே மேனன் சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது நேற்று மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போன்று கோவை ஒப்பணக்காரர் வீதி பகுதியில் செயல்பட்டு வரும் மாருதி டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடையின் மீது நேற்று மர்ம நபர்கள் திரியுடன் மண்ணெண்ணெய் குண்டு வீசிச் சென்றனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.
இரு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. கோவை மாநகர் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் நிலையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக விடுதிகளில் தங்கி உள்ளவர்களின் பின்னணி குறித்தும் போலீசார் விசாரித்த வருகின்றனர். மேலும் கோவை மாநகர் முழுவதும் உள்ள இந்து மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை பாஜக அலுவலக பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக சென்னை தியாகராய நகர் வைத்தியநாதன் தெருவில் உள்ள தமிழக பாஜக அலுவலகத்தில் வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெருவின் இரு முனைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து, தெருவுக்குள் வரும் நபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
– ஜெனி









