கொரோனா தொற்று, மனித உயிர்களை கருணையின்றி காவு வாங்கி வருகிறது. இந்தத் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றன. ஊரடங்கு காரணமாக கோயில்கள் அடைக்கப்பட்டாலும் பிரார்த்தனைகள் மனதுக்குள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கிடையே, கோவையில் கொரோனா தேவி சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள், பயங்கொண்ட பக்தர்கள்!
இந்த தேவியின் சிலை, கோவை இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தின் 51வது சக்தி பீடத்தில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய காமாட்சிபுரி ஆதீனத்தின் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கொரோனா என்னும் கிருமியால் மனித வாழ்க்கை சீர்குலைந்து விட்டதாகக் குறிப்பிட்டார்.

அம்மை, காலரா போன்ற பாதிப்புகள் ஏற்பட்டபோது, முத்து மாரியம்மன், பிளேக் மாரியம்மன் என மக்கள் வழிபட்டதாகக் குறிப்பிடும் அவர், அதேபோல், கொரோனோவில் இருந்து பாதுகாப்பு பெற, கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கருங்கல்லாலான இந்த அம்மன் சிலைக்கு, 48 நாட்கள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார்.







