கோயமுத்தூர் சூலூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வெளிநாட்டு போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது வெளிநாட்டு போதைப்பொருட்களை பயன்படுத்திய மூன்று கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோயமுத்தூர் மாவட்டம் சூலூரை அடுத்த நீலாம்பூரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் சிலர் வெளிநாட்டு போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை தொடர்ந்து நீலாம்பூர் பகுதியில் தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இளைஞர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர்.அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான வகையில் பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் உடமைகளை சோதனை செய்ததில்
அதில் வெள்ளை நிற பாக்கெட் ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து கேட்டப்போது இளைஞர்கள் சரிவர பதிலளிக்காத காரணத்தினால் அவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த நந்த கிருஷ்ணா என்பதும் நவ இந்தியா பகுதியிலுள்ள பிரபல கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும்,அவர்களுக்கு பாலக்காட்டை சேர்ந்த முகமது அசாரத் என்பவர் மூலமாக வெளிநாடுகளில் இருந்து மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப்பொருட்களை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 60 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து என்பதாயிரம் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சூலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
—-வேந்தன்







