FIFA2026: நார்வே-க்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் தோல்வி – கண்ணீருடன் ஓய்வுபெற்ற நெய்மர்..!

உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரேசிலுக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நார்வே வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

2026 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்துப் தொடர் அமெரிக்கா, கனடா , மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றுகள் மற்றும் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுகள் முடிந்து தற்போது ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் பிரேசில் – நார்வே அணிகள் மோதின. போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்தன. இதனைத்தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 79-வது நிமிடத்தில் நார்வே வீரர் ஹாலண்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் நார்வே 1-0 என முன்னிலை பெற்றது. இதனையடுத்து 90-வது நிமிடத்தில் ஹாலண்ட் மற்றும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் நார்வே 2-0 என தொடர்ந்து முன்னிலையில் தொடர்ந்தது.

இந்த நிலையில் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் பிரேசில் வீரர் நெய்மர் பெனால்டி கிக் மூலம் ஒருகோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் நார்வே அணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் நாக் அவுட் போட்டியில் தோல்வி அடைந்ததால் பிரேசில் வெளியேறியது. இதனால் கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படும் பிரேசில் விரரின் கடைசி போட்டியாக இது அமைந்தது. தோல்விக்கு பின் கண்ணீருடன் மைதானத்தில் காணப்பட்ட நெய்மார், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். “நான் முயற்சித்தேன், தொடர்ந்து முயற்சித்தேன், ஆனால் இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. நான் இங்கேயே தொடங்கினேன், இங்கேயே முடிக்கிறேன்’ என்று கூறினார்.

பிரேசில் அணிக்காக 129 போட்டிகளில் விளையாடிய நெய்மார், 80 கோல்களை அடித்து, அந்த நாட்டின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையுடன் தனது ஓய்வுபெற்றார். இதன்மூலம், அவரது 16 ஆண்டுகள் நீண்ட சர்வதேச கால்பந்து பயணம் நிறைவடைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.