நாமக்கல் எஸ்.கே நகர் குடிசை மாற்று வாரியத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நாமக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில்
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நாமக்கல் மாநகர எல்கைக்கு உட்பட்ட எஸ்.கே நகரில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 198 வீடுகளில் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இதற்காக பொதுமக்களிடம் இருந்து குடிநீருக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக
இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று காலையில் திடீரென நாமக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனையடுத்து நாமக்கல் போலீசார் போரட்டம் நடத்திய பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடன் இதுகுறித்து பேசி விரைவில் முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அவர்கள் கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—வேந்தன்