வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டம்: தலைவர்கள் கண்டனம்!

வேளாண் மண்டலத்தில், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி…

வேளாண் மண்டலத்தில், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்! -

இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தஞ்சை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருந்து வருகிறது. ஆனால் தற்பொது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒரத்தநாடு, வடசேரி, பரவன்கோட்டை, கீழ்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஆயத்த பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்வு தஞ்சை மாவட்ட விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விவசாயப் பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் தோண்டினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும், இதனால் லட்சக்கணக்கான விவசாயிகளும், பொது மக்களும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகவே விவசாயிகளின் வருங்கால நலன், மற்றும் வாழ்வாதாரத்தை மனதில்கொண்டு வேளாண் மண்டலத்தில், நிலக்கரி சுரங்கம் அமைக்கும் ஆயத்தப் பணியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியதாவது:

விவசாயிகளுக்கு ஆதரவாக மட்டுமல்ல, போராட்டக் களத்தில் நான் தான் முதல் ஆளாக நிற்பேன். என் நிலத்தை இழந்தால் என் வளத்தை இழப்பேன். என் வளத்தை இழந்தால் என் இனத்தை இழப்பேன். இந்த அரசுகள் தீர்ந்து போகின்ற வளங்கள் மீதே கை வைக்கின்றன. நிலக்கரியை இன்னும் எவ்வளவு காலத்திற்கு எடுப்பீர்கள். ஒரு அடிப்படை அறிவற்ற கூட்டத்திடம் நாட்டை கொடுத்துவிட்டு மீத்தேன், ஈத்தேன் என மாறி மாறி தோண்டி தோண்டி பூமியை நாசம் செய்கிறார்கள். எந்த மாநிலத்தில் இப்படி எல்லாம் நடக்கிறது என்று குற்றம் சாட்டியதோடு, மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு ஒருபோதும் துணை போகக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர்  பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே NLC நிறுவனம் விரிவாக்கம் என்ற பெயரில் காவிரி டெல்டா பகுதிகளில் பல ஏக்கர் விவசாய நிலங்களை கபளிகரம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டங்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த டெண்டர் அறிவிப்பு விவசாயிகளிடம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும். மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்; விவசாயம்தான் வேண்டும் என்பதே டெல்டா மக்களின் நிலைப்பாடு.

ஆகவே, மாநில அரசு இது வெறும் ஆய்வுப்பணிதான், சுரங்கம்  அமைக்கப்போவதில்லை என தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளைப் போல மக்களை ஏமாற்றாமல், இந்த ஆய்வுப்பணிக்காக விடப்பட்ட டெண்டரை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவதற்கு உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும்.

தும்பை விட்டு வாலை பிடிப்பதைவிட ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் போராட்டமாகவே காவிரி டெல்டா பகுதிகளில் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன் என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.