ஆப்பிள் பயனாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையை இந்திய அரசு விடுத்துள்ளது. அதனை சமாளிப்பதற்கான ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுக்க மொபைல் போன், கணினி, ஸ்மார் வாட்ச் போன்ற புதிய வகை தொழில்நுட்பங்களில் ஐஓஎஸ் எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆன்ராய்டு நிறுவனத்தின் மென்பொருள்கள் பயன்பாட்டில் உள்ளன.
ஆன்ராய்டு மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற மென்பொருளில் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் புதிய வகை அட்வான்ஸ்டு தொழில் நுட்பங்கள், அனிமேஷன்கள் போன்றவை குறைவாக உள்ளது என்ற காரணத்தினால் அதிகமான பயனாளர்கள் ஆப்பிள் மென்பொருளுக்கு மாறி விடுகின்றனர்.
ஆப்பிள் மென்பொருள் கொண்டு தயாரிக்கப்படும் ஐபோன், ஐபேட், ஐமேக் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்றவற்றில் ஹை செக்யூரிட்டி எனப்படும் பாதுகாப்பு சார்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹேக்கர்களால் ஆப்பிள் பயனாளர்களின் சாதனங்களை எளிதில் ஹேக்கிங் செய்ய இயலாது.
இந்த நிலையில் ஆப்பிள் பயனாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையை இந்திய அரசு விடுத்துள்ளது. சமீபத்தில் ஆப்பிள் பயனாளர்களின் மென்பொருளில் சில குறைபாடுகள் உள்ளதாகவும், செக்யூரிட்டிகளில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே ஆப்பிள் வாட்ச், ஐமேக், ஆப்பிள் டிவி போன்றவற்றை உடனடியாக சமீபத்திய வெர்ஸனோடு அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய அரசின் இந்தியன் கம்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம் அல்லது CERT-In வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஐமேக்கில் உள்ள சஃபாரி வெப் பிரவுசரில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் அதன் மூலம் ஹேக்கர்களால் பயனர்களின் சாதனங்களில் எளிதில் உள்நுழைய முடியும் என்றும் CERT-In தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மெமரி பிரச்சினை, தேடுபொறியில் தவறான தகவல்கள், பிரைவசி பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் அப்டேட் செய்யாவிட்டால் வரக்கூடும் என CERT-In தெரிவித்துள்ளது.
மேலும் ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட் போன்றவற்றில் இந்த பிரச்சனை இல்லை எனவும் மொபைல் போன் மற்றும் ஐபேட் பயனர்கள் இது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை எனவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே ஆப்பிள் பயனர்கள் உடனடியாக தங்களது சாதனங்களில் உள்ள மென்பொருளை அப்டேட் செய்து கொண்டால் இந்த எச்சரிக்கையிலிருந்து தப்பிக்கலாம்.
– யாழன்







