திமுக ஆட்சிக்கு வந்தால் சாதாரண மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னையை அடுத்த அம்பத்தூரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் சாதாரண மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் என விமர்சனம் செய்தார். அத்துடன் அதிமுக ஆட்சிக்கு எதிராக, திமுக திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், மு.க.ஸ்டாலின் உண்மை பேசுவது இல்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். திமுக ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது, மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவில்லை, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை, என தெரிவித்த அவர், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அம்பத்தூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என உறுதியளித்தார்.
முன்னதாக, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சென்னை மாநகர மக்களின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். தனது சாதனைகளால் இந்தியாவை உலக நாடுகள் திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரதமர் மோடி என்றும் வல்லரசு நாடுகளே வியக்கும் வண்ணம் கொரோனா தடுப்பு பணியை இந்தியா மேற்கொண்டதாகவும் புகழாரம் சூட்டினார்.







