மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
மாநகரம், கைதி திரைப்படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் விறுவிறுப்பான கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. நடிகர் நரேன் மற்றும் நடிகர் கார்த்திக்கு இத்திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் அர்ஜுன்தாஸின் வில்லத்தனமான நடிப்பு அவருக்கு தொடர்ந்து பல வாய்ப்புகள் வாங்கித் தந்தது.
இதைத்தொடர்ந்து தனது மூன்றாவது திரைப்படமான மாஸ்டரில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றினார். மேலும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் பவானி கதாப்பாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. கொரோனா காலத்தில் அதிகபடியான வசூலையும் ஈட்டியது.
இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கூடிய விரைவில் இன்னும் பலமாக மாறி உங்களை சந்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். லோகேஷ் விரைந்து நலம்பெற திரையுலகினர் வாழ்த்தி வருகின்றனர்.







