2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
4வது நாளான இன்று எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை, வெள்ள பாதிப்பு குறித்த மக்களின் குறைகளை, தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து பதிலளித்தார். தொடர்ந்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில், கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்டார். தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, தியாகராய நகரில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் ஆய்வு செய்தேன்” என்று தெரிவித்தார். இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.








