சிபிஐயின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து அந்நிய முதலீடு பெற்றுக்கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி…

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து அந்நிய முதலீடு பெற்றுக்கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமலக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தங்கள் தரப்புக்கு அளிக்க வேண்டும் என குற்றம்சாட்டப்பட்ட ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் கூடுதல் கோரிக்கை வைத்தனர்.

அதனையேற்ற சி.பி.ஐ நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்களை குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு வழங்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சி.பி.ஐ. தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது, இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது CBI-யின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணை அமைப்பான சி.பி.ஐ திரட்டிய ஆவணங்களை ஆய்வு செய்ய குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அனுமதி அளித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.