அதிமுக கூட்டணி பெரும்பான்மையுடன், மிகப்பெரிய வெற்றியை பெறும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என பெருமிதம் தெரிவித்தார். பாஜக, பாமக, தமாக உள்ளிட்டவைகளுடன் இணைந்து அதிமுக வலிமையான கூட்டணி அமைத்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் சாதாரண தொண்டன் முதல் எம்எல்ஏ வரை யாரும் முதல்வராக வரமுடியும் எனவும், ஆனால் திமுக என்பது கார்ப்ரேட் கம்பெனி எனவும் விமர்சனம் செய்தார்.
முன்னதாக சேலம் மாவட்டம், சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து, பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி என்றும், மக்கள் நலனுக்கான கூட்டணி என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால், பொதுமக்களின் சொத்துக்கள் அனைத்தும், திமுகவினர் வசம் சென்றுவிடும் என குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போதே ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிட்டதை போன்று பேசி வருவதாகவும், விமர்சனம் செய்தார்.
அதிமுக ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்ற எந்த பிரச்னைகளும் இன்றி, மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதாகவும், அவர் குறிப்பிட்டார். ஆட்சியில் இல்லாதபோதே அராஜகம் செய்யும் திமுக, ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிம்மதி போய்விடும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.







