நடிகர் விஜய் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜனநாயகன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் விஜய், பூஜா ஹெக்டே அனிரூத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லி உள்ளிட்ட இயக்குநர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அட்லீ; “விஜய் அண்ணா நல்ல மனிதர். நான் சினிமாவுக்கு வந்த போது அவர் 50 படங்களை கடந்துவிட்டார். நான் உதவி இயக்குநராக இருந்த போது என்னை அழைத்து, ‘நல்லா பண்றீங்க, எதாவது கதை இருந்தா சொல்லுங்க என்று சொன்னார். எந்த நடிகரும் அப்படி சொல்லமாட்டார்கள்” என்றார்.
தொடர்ந்து அவர், “வாழ்க்கையில், நாம் மூன்று வகையான மனிதர்களை சந்திப்போம். சிலர் இலைகளைப் போன்றவர்கள். அவர்கள் தங்கள் நோக்கம் முடிந்ததும் சென்று விடுவார்கள். சிலர் கிளைகளைப் போன்றவர்கள். அவர்கள் சிறிது காலம் இருப்பார்கள், ஆனால் புயலின் போது விழுந்துவிடுவார்கள். ஆனால் சிலர் வேர்களைப் போன்று எபோதும் உங்களுடன் நிற்பார்கள். விஜய் அண்ணா உங்களை ஒருபோதும் விட்டுவிட மாட்டார்” என்றார்.







