சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுவதால், பயிர்களைக் காக்க செயற்கை மழையை உருவாக்கும் சீன அரசின் முயற்சி கை கொடுக்குமா?… விரிவாக பார்க்கலாம்...
சீனாவில் 61 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த கோடைகாலத்தில் வெப்பநிலை அதிகமாக பதிவானது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டத்தின் அளவு பாதியாக குறைந்துவிட்டது. சிச்சுவான் மாகாணத்தில் கடந்த வாரம் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை கடந்ததால், வீடுகளில் குளிர்சாதன இயந்திரங்களின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த வாரம் மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் மூடப்பட்டன.சிச்சுவான், அதன் அண்டை மாகாணமான ஹூபேயில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமடைந்துவிட்டதாக அந்த மாகாண அரசுகள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே சீன பொருளாதார வளர்ச்சி சுணக்கமடைந்துள்ள நிலையில், தற்போது நிலவும் வறட்சியானது சீன அரசுக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது.பயிர்கள் சேதமடைந்ததால் வறட்சி அவசரநிலையை அறிவித்த ஹூபே மாகாணம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி அளிக்கப்படும் என தெரிவித்தது. சிச்சுவான் மாகாணத்தில் 8,19,000 பேர் குடிநீரின்றி அவதிப்படுவதாக அந்த மாகாண அரசு தெரிவித்துள்ளது . சீனாவின் ஆண்டு மொத்த உற்பத்தியில் இலையுதிர் கால அறுவடை 75 சதவீதம் பங்கு வகிப்பதால், எவ்வித சேதமும் ஏற்படாதவாறு அறுவடையை உறுதிப்படுத்த அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றனர். மேலும், மேகத்தில் ரசாயனத்தை தூவி, செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்புத் திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.இதன்படி ஹூபே மாகாணத்தில் சில்வர் அயோடைடு ராடுகளை ராக்கெட் போன்று மேகத்தில் மோதச் செய்து அதிகாரிகள் செயற்கை மழையைக் கொண்டு வந்தனர். இந்த இடத்தில் செயற்கை மழை என்றால் என்ன என்ற கேள்வி எழலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
செயற்கை மழை என்பது மேகங்களை செயற்கையாக உருவாக்கி மழை பொழியச் செய்வது அல்ல. ஏற்கனவே இயற்கையாக உருவான மேகங்கள் மீது சில வேதிப்பொருட்களை தூவி மழையைப் பெறுவது தான் செயற்கை மழை. மிக எளிதாக தோன்றும் இந்த முறை உண்மையிலேயே மிகக் கடினமானது. மேலும் அதிக பொருட்செலவைக் கோருவது…. மேலும், அளவுக்கு அதிகமான வேதிப்பொருட்களை தூவி மழை பெய்யச் செய்வது மாசுக்களை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இயற்கையாக நிகழும் விஷயங்களில் அறிவியலை உட்புகுத்தி சில நன்மை பயக்கும் முயற்சிகள் பண்டைக்காலம் தொட்டு மனிதனால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் செயற்கை மழையும் அம்முயற்சியில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் சில மேம்பாடுகளை மேற்கொள்ளும்போது முழு வெற்றிகரமான ஒன்றாக மாறி மனித குலத்திற்கே வரப்பிரசாதமாக செயற்கை மழை உருவெடுக்கக்கூடும். இருப்பினும் சீனா தற்போது எதிர்கொண்டுள்ள திடீர் வறட்சியை நீக்கி விளைச்சலை அதிகப்படுத்த செயற்கை மழை கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.