கதவோடு சேர்த்து கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர்கள்: கடலூரில் தொடரும் அவலம்

கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் வாயிற் கதவுகளை மூட முடியாமல் கான்கிரீட் கொட்டப்பட்டு  தொடர் அவலங்கள் நடைபெற்று வருகிறது. கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் கிளைச் சிறை சாலையில்…

கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் வாயிற் கதவுகளை மூட முடியாமல் கான்கிரீட் கொட்டப்பட்டு  தொடர் அவலங்கள் நடைபெற்று வருகிறது.

கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் கிளைச் சிறை சாலையில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியின் போது இரும்பு கதவுகளில் சிமெண்ட் கான்கிரீட் கொட்டியதால் அதனை திறந்து மூட முடியாமல் இருந்தது. இதனால் அங்கு பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு அவலம் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வாயிற் கதவில் கான்கிரீட் கொட்டப்பட்டு கதவை இயக்க முடியாத நிலையில் உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான கதவில் கான்கிரீட் கொட்டப்பட்டுள்ளது. இருபுறமும் புதிய வடிகால் வாய்க்கால் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அலுவலகம் சற்று தாழ்வாக உள்ளதால் அதனை சரி செய்ய சென்று, அலட்சியமாக கான்கிரீட் கொட்டியதால் கதவை இயக்க முடியாத சூழலால் ஊழியர்கள் திகைத்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இதுபோன்று செயல்களில் ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் செய்யும் பணிகள் தரமாக இருக்குமா பொதுமக்களுக்கு ஏதுவாக பணியை மேற்கொள்ளப்படும் என பல்வேறு தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.