சென்னை மாதவரம் பால்பண்ணையில் 10 வயது சிறுமியை அந்த குழந்தையின் தாய் உதவியுடன் பாலியல் வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் மாதவரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாதவரம் பால்பண்ணையில் காவல் ஆய்வாளராக பணியாற்றிவருபவர் சதீஷ்குமார். இவர் அதேபகுதியில் நியாய விலை கடையில் பணியாற்றிவரும் பெண்ணுடன் பழகிவந்துள்ளார்.
இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்ற பிறகு பெண்ணின் வீட்டிற்குச் சென்றுவருவதைக் காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 10 வயதில் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியிடமும் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் சதீஷ்குமார்.
இந்த கொடூரத்துக்குப் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயும், பெரியம்மாவும் உடனிருந்துள்ளனர். இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க பாதிப்புக்குள்ள குழந்தையின் தாய் மற்றும் பெரியம்மாவுக்கு செல்போன், பண உதவிகளைச் செய்துவந்துள்ளார் சதீஷ்குமார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமையை தன் தந்தையிடம் ஒருகட்டத்தில் தைரியமாகக் கூறத்தொடங்கியுள்ளார். இதனையடுத்து மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சதீஷ்குமார், சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான ‘போக்சோ’ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மாணவிகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாதுகாப்பு அளிக்கவேண்டிய காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருப்பது தமிழ்நாடு காவல் துறையினர் மத்தியில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது.







