சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பெற்ற பெண் குழந்தையை வழியில் கண்டெடுத்ததாக கூறி தந்தை உட்பட இருவர் வந்து ஒப்படைத்த நிலையில் குழந்தைகள் நலக்குழு விசாரனையில் உண்மை தெரியவரவே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள எருமாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆனந்தகுமார், சுபாஷினி தம்பதியர். இவர்களுக்கு 6 மாத பெண்குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் ஆனந்தகுமார் வசமே பெண்குழந்தை இருந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் ஆனந்தகுமாருக்கும் அவரது தந்தை பெரியசாமிக்கும் இந்த குழந்தையை வைத்து வளர்க்க விருப்பமில்லாத காரணத்தால் குழந்தையை உறவினர்களான தர்மபாண்டி மற்றும் செல்வம் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அநாதை குழந்தை என கூறி ஒப்படைக்க முடிவு செய்ததுடன், இந்த குழந்தை தாங்கள் திருப்பாச்சேத்தி கிராமத்திற்கு காரில் செல்லும் வழியில் யாரும் அற்ற நிலையில் அழுதுகொண்டிருந்ததாக கூறி ஒப்படைக்க முடிவு செய்து அதன்படியே நாடகமாடியுள்ளனர்.
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து குழந்தையை பெற்றுக்கொண்ட குழந்தைகள் நலக்குழுவினர். உண்மை நிலையை அறிய தங்களது விசாரனையை துவங்கிய நிலையில் இவர்கள் ஆடிய நாடகம் வெளிச்சத்திற்கு வரவே, சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவிக்கவே உடனடியாக விரைந்து செயல்பட்ட போலீசார், குழந்தையின் தந்தை ஆனந்தகுமார் மற்றும் அவரது உறவினர் தர்மபாண்டியையும் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான ஆனந்தகுமாரின் தந்தை பெரியசாமி மற்றும் மற்றொரு உறவினரான செல்வம் ஆகியோரை தேடிவருகின்றனர். தந்தை தான் பெற்ற குழந்தையையே வழியில் கண்டெடுத்ததாக கூறி மருத்துவமனையில் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.