தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். மேலும், 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 7, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்று, 12-ஆம் தேதி அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.
இந்த நிலையில், சுதந்திர தினத்தை ஒட்டி சட்டப்பேரவைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் சட்டப்பேரவை ஆகஸ்ட் 17-ஆம் தேதி கூடியது. அப்போது முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், கடந்த வியாழனன்று முதலமைச்சர் விஜய் வசமுள்ள காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பேரவைக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று காலை 9:30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத்தொடரில் காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலளிக்கிறார். இதனையொட்டி, இன்று கேள்வி நேரம் ஒதுக்கப்படாது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, வியாழனன்று மானியக் கோரிக்கை மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 116 நாள் தவெக ஆட்சியில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது, இந்த அரசின் திட்டங்களுக்கு காதுகுத்து தாய்மாமன் திட்டம் என பெயரிடலாம், கடந்த 100 நாட்களில் 8 காவல் மரணங்கள், 10 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் 3 நாட்கள் விடுமுறையில் தயார் செய்து வந்து பதிலளிக்க வேண்டும் என்றார்.
இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, முதலமைச்சர் விஜய் குறுக்கிட்டு, உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு திங்கட்கிழமை பதிலளிக்கிறேன், யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது என்று கூறிவிட்டு சென்றார்.
இதனால் இன்றைய கூட்டத்தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




