தமிழகத்தில் பதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வருகின்ற செப்டம்பர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதகா என 5 முனைப் போட்டி நிலவும் இந்த தேர்தலையொட்டி அனைத்துக் கட்சித் தலைவர்களுகும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.
முதலமைச்சர் விஜய் கடந்த செப். 25-ஆம் தேதி மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ளும், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று (30.09.2026, புதன்கிழமை), திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சித்ராவுத்தன்பாளையம் கிராமம், மாருதி நகரில் மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




