சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், வரதராஜபுரம் பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக, சென்னை புறநகர்ப் பகுதிகள் அதிகம் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
அதேபோல, சென்னையை அடுத்த தாம்பரம், முடிச்சூர், இரும்புலியூரில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து, சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரண உதவிகளையும் வழங்கினார்.








