சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை – அதிமுக புறக்கணிப்பு!

முதலமைச்சரின் உரையை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கடந்த 20ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின் தேசிய கீதம் பாடப்படவில்லை என குற்றம்சாட்டி தனது உரையை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையை விட்டு வெளியேரினார்.

இதையடுத்து ஆளுநரின் தமிழாக்க உரையை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார். இது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து 21ம் தேதி மறைந்த சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, மறைந்த தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், முன்னாள் மக்களவை தலைவர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் மறைவுக்கும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்து முடித்ததும் அவை நடவடிக்கை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 22-ம் தேதி முதல், ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.

இதனைத் தொடர்ந்து, இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிலுரை இடம் பெற்றது. ஆனால், முதலமைச்சரின் உரையை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்தது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் யாரும் இன்று அவைக்கு வரவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.