“தேச விரோதிகள் யார் என்பது மக்களுக்கு தெரியும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக ஆட்சியில் 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் வீடு கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 5-வது நாள் அமர்வு இன்று தொடங்கியது. ஆளுநர் உரை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை வழங்க உள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையை புறக்கணித்துள்ளனர். இந்த நிலையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில், “5 ஆண்டுகள் கடந்த நிலையில், நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்கள் மன நிறைவு அளிக்கும் வகையில் ஆட்சி அமைத்து உள்ளோம். விடியல் பயணம் மூலம் ஒவ்வொரு மகளிரும் ரூ. 60 ஆயிரம் சேமித்துள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தில ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ.29,000 வழங்கி உள்ளோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து இருந்தது.

திமுக ஆட்சியில் 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் வீடு கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 8000 கோடி கோயில் சொத்துக்கள் மீட்கபட்டுள்ளது.
12 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 1.35 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கொடுவரப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்று, 1,724 நாட்கள் ஆகிறது. 15,137 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன்.

இதில் 8 ஆயிரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டுள்ளேன். பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிரந்தர பணி நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுகிறேன். சிறப்பு மதிப்பெண் அளிக்கபட்டு காலி பணியிடங்கள் நிரப்பபடும். குடும்ப ஓய்வூதியம் 1500ஆக வழங்கபடும். திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்ட ஒழுங்கை பொறுத்த வரையில் அதிமுக ஆட்சியை ஒப்பீடும் போது கொலை கொள்ளை சம்பவங்கள் குறைந்து உள்ளது. 1.43 விழுக்காட்டினர் மட்டுமே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறி உள்ளது. ஆளுநர் உரையை படிக்காமல் போனது வேதனை அளிக்கிறது. அவரது பொறுப்பை அவரே அவமானபடுத்துகிறார்.

கடந்த 3 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தயாரித்து கொடுக்கும் உரையை படிக்க மறுக்கிறார். அதுவே இந்த அவைக்கு மிக பெரிய சவால். தேசிய ஒருமை பாட்டிலும், நாட்டு பற்றிலும், தேசபக்தி பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை. தேச விரோதிகள் யார் என்பது மக்களுக்கு தெரியும், ஆளுநருக்கு விளக்கம் அளித்து பேச கூடிய நிலையில் உள்ளேன். எனக்கும் எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் உழைத்து வருகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து உள்ளனர் என உறுதியாக சொல்கிறேன்”. இவ்வாறு அவர் பேசினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.