“திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்” – எதிர்கட்சித் தலைவர் #EPS பேச்சு!

திமுக ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அஇஅதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருநெல்வேலி புறநகர்…

“Chief Minister M.K.Stalin took Rs 3.50 Lakh Crore loan during DMK regime” - Leader of Opposition #EPS Speech!

திமுக ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருநெல்வேலி புறநகர் மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், இசக்கி சுப்பையா, நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழா மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மக்கள் அடிப்படையில் துவங்கப்பட்ட கட்சி அதிமுக. பிரிந்த இயக்கத்தை ஒன்றிணைத்த பெருமை முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவை சேரும். துவக்க விழா என்பது சாதாரணம் அல்ல. அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதராங்களை எடுத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவை அனைத்தையும் வீழ்த்தியவர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா.

அதிமுக 2ஆக பிரிந்து விட்டது என கூறி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக ஒன்றாக தான் இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சியை பிளவுபடுத்த திமுக போடும் நாடகம் இது. கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தினர் மட்டுமே திமுகவில் பதவிக்கு வர முடியும். அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். விசுவாசமாக இருப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அதிமுக. அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி அதிமுக.

தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி அதிமுக. அதிமுகவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. திமுக தான் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருகிறது. கூட்டணி கட்சிகளை தாங்கி நிற்கின்றது திமுக. அதிமுக சொந்த காலில் நிற்கிறது. சொந்த காலில் நிற்கின்றவர்களுக்கு தான் பலம் அதிகம். திமுக கூட்டணியில் பிரச்னை வந்துவிட்டது. திமுகவிற்கு மக்களிடத்தில் செல்வாக்கு சரிந்துவிட்டது. அதனால் தான் கூட்டணி கட்சியினர் மக்கள் பிரச்னைகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.

தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட 525 வாக்குறுதிகளில் எதனையுமே நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் கட்சி திமுக. அதிமுக கொண்டு வந்த திட்டத்தை திமுக ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 64% இதுவரை மின்கட்டணம் உயர்ந்துள்ளது. மன்னராட்சி வேண்டுமா? குடும்ப ஆட்சி வேண்டுமா? வாரிசு அரசியல் வேண்டுமா? நாட்டை ஆளுகின்றவர்கள் திறமை உள்ளவர்களாக, அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

பெண்கள் பலாத்காரம், பாலியல் வன்கொடுமை நடைபெறுவதற்கு காரணம் கஞ்சா. கஞ்சா நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் சாதாரணமாக கஞ்சா கிடைக்கின்றது. சென்னை உயர்நீதி மன்றமே எச்சரிக்கை விடுத்துள்ளது. திமுக ஆட்சியில் கடன் மட்டும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. திமுக ஆட்சிக்கு வரும்முன் நீட் ரத்து என சொன்னார்கள். இதுவரை நீட் ரத்துகான ரகசியத்தை உதயநிதி வெளிவிடவில்லை” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.