ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம் ஆண்டு பிறந்தவர் பங்காரு அடிகளார். பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், ஆசிரியையாகப் பணியாற்றிய லட்சுமி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அன்பழகன், செந்தில்குமார் என இரு மகன்கள் உள்ளனர்.
1970-ம் ஆண்டு முதல் சக்தி பீடத்தை நிறுவி அருள்வாக்குக் கூறிவந்த பங்காரு அடிகளார், பெண்கள் கருவறைக்குள் சென்று வழிபடலாம் என்பதையும், எல்லா நாட்களிலும் எல்லாப் பெண்களும் கோயிலுக்குள் சாமியை வழிபடலாம் என்ற புரட்சியையும் ஏற்படுத்தினார். கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, இறுதி காலம் வரை ஆன்மிகத்துக்கும் கல்விக்கும் தொண்டாற்றி வந்தார்.
இதனைடையே நேற்று ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனரான பங்காரு அடிகளார், தனது 83வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். கடந்த ஓராண்டாகவே சிகிச்சை பெற்று வந்த பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார். அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு அரசியல் பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படியுங்கள் : காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் – 4 இந்தியர்களை மீட்பதில் சிக்கல்..!
இந்நிலையில் இன்று பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்திச் சென்ற பின்னர் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மேல்மருவத்தூர் தியான பீடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாடை உடுத்தி தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.








