பாதி கலைஞராக, பாதி அண்ணாவாக மாறிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து சட்டசபையில் பேசிய அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மிகக் கடுமையாக சாடினார்.
அப்போது பேசிய அவர், திமுக சார்பில் சில கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறேன். சரியான நேரத்தில் தான் முதலமைச்சர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். பிசிறில்லாமல் நாகரிகத்துடன், காழ்ப்புணர்ச்சி சிறிதுமின்றி ஆளுநருக்கு எதிராக தீர்மானம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசை ஆட்டிபடைக்க ஒரு ஏஜென்ட் தேவை என்பதால் தான் ஆளுநர் பதவியை மத்திய அரசு உருவாக்கியது. ஆளுநரை பலமுறைப் பார்த்தோம். மனதில் எப்போதும் உள் ஒன்று வைத்து புறமொன்று பேசுகிறார்.
ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்பதை நன்கு தெரிந்து கொண்டே அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். ஆளுநர் விவகாரத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நல்லவர்கள் ஆகிவிட்டனர். சட்டப்பேரவை விதிகளை திருத்த கற்றுத் தந்ததே அதிமுக தான். சென்னாரெட்டி ஆளுநராக இருந்தபோது அவரை அவமதிக்கும் வகையில் அவர் மீது கற்களை வீசி எரிந்தது போல நாங்கள் செய்ய மாட்டோம். நாங்கள் கண்ணியமானவர்கள்.
ஆட்சிக்கு வருவோமா என தெரியாத காலத்திலேயே, ஆளுநர் பதவி தேவையில்லை என கூறிய கட்சி திமுக. பாதி கலைஞராக, பாதி அண்ணாவாகிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









