300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை 9 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் கட்டுப்படுத்தினர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை சோத்துப்பாறை அணை சாலையில் நந்தவனம் என்னும் இடத்தில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பெரிய ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென தீப் பற்றி எரியத் தொடங்கியது.
இதனையடுத்து பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மாலை முதல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ ஆலமரத்தின் மிக உயரமான பகுதி முழுவதும் எரிந்ததால் நீரை பாய்ச்சியடிக்கும் போது தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இரவு 12 மணி வரை தீயை அணைத்த போதிலும் முழுமையாக கட்டுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே இன்று காலை 6 மணி முதல் மீண்டும் ஆலமரத்தில் பற்றிய தீயை மரத்தின் மீது ஏறி நீரை பாய்ச்சி அடித்து கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு பின்னர் 9 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை முழுவதுமாக கட்டுப்படுத்தியுள்ளனர்.
பழமை வாய்ந்த ஆலமரத்தில் தீ எப்படி பிடித்தது? யாரேனும் மரத்தை சேதப்படுத்த தீ பற்ற வைத்துள்ளார்களா? என காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
—அனகா காளமேகன்







