பாஜகவை எதிர்ப்பவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்தி இல்லத் திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது விழாவில் உரையாற்றிய அவர் கூறியதாவது:
இன்று வள்ளலாரை பற்றி ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். புலம்பிக்கொண்டும், உளறிக்கொண்டும் இருக்கிறார். ஆனால் அவர் யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. அது தமிழ்நாட்டிற்கே தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதே போல் இந்தியாவிலும் மத்தியில் ஒரு சிறப்பான ஆட்சி தேவை. மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்கள் ஆட்சி பொறுப்பெற்றதில் இருந்து மக்கள் விரோத போக்குகளையும், மதத்தையும் மக்களிடத்தில் திணித்து சர்வாதிகார ஆட்சியை மத்தியில் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். பொது சிவில் சட்டம் மூலம் பாஜகவின் கொள்கைகளையும், பாஜகவை எதிர்ப்பவர்களையும் பழிவாங்கும் நோக்கத்துடன் தீய செயல்களை செய்கிறார்கள்.
நாட்டில் ஏற்கனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டங்கள் இருக்கிறது. அதை நீக்கி விட்டு, பொது சிவில் சட்டமாக கொண்டு வந்து பாஜக கொள்கைகளை அதில் திணிக்க உள்ளனர். அவர்களின் ஆட்சியை எதிர்க்க கூடியவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், மக்களுக்கு துன்பங்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கிலும் தான் அவர்கள் இதை செய்கின்றனர். ஏற்கனவே அவர்களை எதிர்க்க கூடியவர்களை, சிபிஐ, ஐடி, இடி போன்ற துறைகளை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடிக்கு எங்கு சென்றாலும் திமுக தான் ஞாபகத்திற்கு வரும் போல. ஏனென்றால் சமீபத்தில் அவர் மத்தியப்பிரதேசம் சென்றிருந்த போது கூட திமுகவை பற்றித்தான் பேசியுள்ளார். திமுக குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக அவர் பேசியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு இது குடும்பக் கட்சி தான் என்று சொன்னேன். தமிழகம் தான் திமுகவின் குடும்பம் என்று கூறியிருந்தேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா









