11 ஆண்டுகளுக்கு பின் மார்க் ஜுக்கர்பெர்க் போட்ட ட்வீட்! எலான் மஸ்க்கின் சவாலுக்கு ‘த்ரெட்’ ஆப் மூலம் பதிலடி!

ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய மெட்டா நிறுவனத்தின் ‘த்ரெட்ஸ்’ ஆப் வெளிவந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, எலோன் மஸ்க்கை இலக்காகக் கொண்ட ஒரு விளையாட்டுத்தனமான ட்வீட்டை 11 ஆண்டுகளுக்கு பின் மார்க் ஜூக்கர்பெர்க் பகிர்ந்துள்ளார். எலான்…

ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய மெட்டா நிறுவனத்தின் ‘த்ரெட்ஸ்’ ஆப் வெளிவந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, எலோன் மஸ்க்கை இலக்காகக் கொண்ட ஒரு விளையாட்டுத்தனமான ட்வீட்டை 11 ஆண்டுகளுக்கு பின் மார்க் ஜூக்கர்பெர்க் பகிர்ந்துள்ளார்.

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான ஆப் ஆன த்ரெட்ஸை இன்று மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்,  உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதன்மையில் இருக்கும் எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இடையேயான மோதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு டெஸ்லா சிஇஓ எலான் மாஸ்க், மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்கை வம்புக்கு இழுக்கும் வகையில் கூண்டு சண்டைக்கு தயாரா என்று தனது ட்விட்டர் மூலம் கேட்டிருந்தார். அதற்கு மார்க் ஜுக்கர்பெர்க் பதிலளிக்கும் விதமாக இடத்தை கூறுங்கள் என தனது இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.

இது ஒரு புறம் இருக்க, கூண்டு சண்டை நடைபெறுமா, பெறாதா என்ற நிலை இருக்க, எலன் மாஸ்கின் ட்விட்டருக்கு சவால் விடும் வகையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக பயன்படுத்தக் கூடிய ட்விட்டர் போன்றே இயங்கும் தளமான ‘த்ரெட்’ என்கிற புதிய ஆப்பை மார்க்
ஜூக்கர்பெர்க் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த ‘த்ரெட்’ ஆப் ட்விட்டர் போன்றே உரை அடிப்படையிலான உரையாடல் பயன்பாடாகும், இதன் காரணமாக இது ட்விட்டரின் குளோன் என சிலர் அழைக்கின்றனர்.

மேலும் ட்விட்டரில் 280 வார்த்தைகள் வரம்பே இருந்து வரும் நிலையில், இந்த ‘த்ரெட்’ ஆப்பில் 500 வார்த்தைகள் வரை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. அதோடு இன்ஸ்டாகிராம் வாயிலாக பயன்படுத்தக் கூடிய உள்நுழைவு வசதி இதில் இருப்பதால், இன்ஸ்டாகிராம் Followers ‘த்ரெட்’ ஆப்பில் உள்ள பயனர்களையும் மிக எளிதில் பின் தொடர முடியும். கூடுதலாக ‘த்ரெட்’ ஆப்பில், பயனர்கள் ட்விட்டர் சமூகங்களை போலவே தற்போதைய மற்றும் பிரபலமான தலைப்புகளை பற்றி விவாதிக்க முடியும்.

மேலும் இதன் மூலம் அவர்கள் தங்களுக்கு பிடித்த படைப்பாளர்களுடன் இணைக்க முடியும். இப்படி கிட்டத்தட்ட ட்விட்டரை போலவே பல அம்சங்கள் இதில் இருப்பதால், ட்விட்டருக்கு கடும் சவாலினை இந்த ‘த்ரெட்’ ஆப் கொடுக்கும் என்பதோடு, ஏற்கனவே ட்விட்டரிலும் பல குளறுபடிகள், பல மாற்றங்கள் கொண்டு வந்து எலான் மஸ்க் பல அதிருப்திகளை சம்பாதித்து இருப்பதால், இந்த ‘த்ரெட்’ ஆப்பிற்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த இந்த ‘த்ரெட்’ ஆப் வெளிவந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, எலான் மஸ்க்கை இலக்காகக் கொண்டஒரு விளையாட்டுத்தனமான ட்வீட்டை மார்க் ஜூக்கர்பெர்க் பகிர்ந்துள்ளார். அதில் ஜூக்கர்பெர்க் இரண்டு ஸ்பைடர்-மேன்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் புகைப்படத்தை பாகிர்ந்திருந்துள்ளதோடு, கடந்த 2012 க்குப் பிறகு கிட்ட தட்ட 11 ஆண்டுகள் கழித்து, தனது முதல் ட்வீட்டை மஸ்க்கின் முந்தைய சவாலுக்கு பதிலளிக்கும் விதமாக பகிர்ந்துள்ள நிகழ்வு இணையவாசிகள் மத்தியில் மிக பெரிய கவனத்தை பெற்றுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.