நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். நேற்று முன்தினம் நிறைவடைந்த நார்வே செஸ் தொடரில், உலகின் முன்னணி வீரர்களை பின்னுக்குத் தள்ளி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். சாம்பியன் பட்டத்துடன் இன்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு ரசிகர்கள் மற்றும் செஸ் ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்த பிரக்ஞானந்தா, அவரது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பெற்றார். அப்போது பிரக்ஞானந்தாவுடன் முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடினார். மேலும் பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப. கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் பெற்றோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




