தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்தல்’ என்ற பெயரில் மீண்டும் இன்ப சுற்றுலா மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு இன்று சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த நிலையில் முதலமைச்சர் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொய்யான வாக்குறுதிகளை அளித்து, எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” செய்வதிலேயே முதலமைச்சரின் மொத்தக் குடும்பமும் மும்முரமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்களை நம்ப வைத்து, வாக்குப் பதிவு முடிந்த அடுத்த நாளே தன் சுயரூபத்தைக் காட்டி, தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் தனி விமானத்தில் மதுரைக்கும், அங்கிருந்து கொடைக்கானலுக்கும் இன்பச் சுற்றுலா சென்று வந்தவர்தான் திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பிறகு ஆட்சிக்கு வந்தவுடன், தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாக கூறி, தன் குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்று வந்தார். ஒருசில நிறுவனங்களுடன் தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அறிவித்தார். 6,000 கோடி முதலீடுகள் வரும் என்று வாயால் வடை சுட்டார். இது நடந்து முடிந்து 700 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை.
இவர்கள் தங்கள் குடும்பத்தின் ஊழல் பணத்தை முதலீடு செய்யச் சென்றார்கள் என்று மக்களிடையே எழுந்த புகார் குறித்து இதுவரை முதலமைச்சர் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை. தொழில் சுற்றுலா என்று முதலமைச்சருடைய மகன் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் மாறிமாறி லண்டன் மற்றும் வெளிநாடுகளுக்குப் பறந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஏற்கெனவே குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலாவை மேற்கொண்ட முதலமைச்சர் இப்போது, மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக, எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா