தடகளத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகளத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ்-க்கு முதல்வர் விஜய் தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார்.

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ஜப்பான் நாட்டில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தடகள வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும், குழு ஒருங்கிணைப்பும் வெற்றியை நோக்கி பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும்.

எதிர்காலத்திலும் இத்தடகள வீரர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.