சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பறிக்காதீர் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் நடைபாதையினை சாலையோர வியாபாரிகளும், மக்களும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தொடுக்கப்பட்ட வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பில், ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதைகளை பெறுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21ன் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்றும், தமிழ்நாடு முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு அரசு இத்தீர்ப்பினை அமல்படுத்துகிறோம் என்கிற பெயரில் நடைபாதைகளில், சாலையோரங்களில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது. அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொண்டே நடைபாதையினை மக்கள் பயன்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சாலையோரங்களில் வியாபாரம் செய்வது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(g)ன் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை தொழில் உரிமை என 1989 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதையும், 2014 ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டமும், 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் விதிகள் கூறியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், இச்சட்டத்தின்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகர விற்பனை குழு அமைக்கப்பட்டு சாலையோரங்களில், நடைபாதைகளில் வியாபாரம் செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு வருகிறது என்பதையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாலையோரங்களில் வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளதையும் கவனத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தின்படி நகர விற்பனை குழுவில் பேசியே முடிவு செய்திட வேண்டும். எனவே, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் நடைபாதையினை சாலையோர வியாபாரிகளும், மக்களும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.